Monday, September 6, 2021

வீரமுனை 1990

வசந்த கால  பனி போர்த்த
மெல்லிய  பின்னிரவொன்றின்
தூக்கம் கலைத்து 
அடங்கிப்போகிறது ஆட்காட்டியின் குரல்

சாளர இடுக்கின் வழியே
துப்பாக்கி கைகள் முகத்தில்
அடித்த மின் சூழின் 
துயர வெளிச்சத்தில்
எஞ்சிய இரவு
ஒளிந்து கொள்கிறது.

நிலை அதிரத் தட்டும் சீருடை
கதவின் பின்னால் இரவை பற்றவைக்க சொல்லும் தருணத்தில்
உரசிய தீக்குச்சொன்று
குப்பி விளக்கை உயிர்ப்பிக்க
பயங்கள் மட்டுமே துணை இருக்க
கத்தியும் ஆண்மையும்
தங்களை கூர் பார்து நிமிர்த போது
இரத்த  வேள்வியில்
உருக்குலைந்து கிடந்தது 
தளிர் விட்ட
தலைமுறை ஒன்று.

வேள்வி முடிந்து 
வீட்டுக்கு  வைத்த தீ
தோற்றுப்போன விடியலுக்குள்
எரிந்து கொண்டிருந்தது
சாட்சிக்கு நின்ற இரவையும்  சேர்த்து

பிணம் தின்ற கழுகும்
பாலூட்டிகளை
வேட்டையாடும் ஆந்தையும்
கூடு வைத்திருக்கும்
போதிமர கிளையின் கீழே
புத்தர் தியானித்துருப்பார்
ஞானத்தின் எச்சம்  வேண்டி

கிழித்தெறிந்த பிள்ளையின்
இடுப்பில் இருந்த  லாட 
துண்டொன்று
கிணற்றில் ஆழ்ந்து கிடக்குறது
விடுதலை கனவோடு.

இரு சமாந்தர நேர்கோடுகள்.

குடை தைப்பவரின் கோடைக்கால
பசி போல்
நிர்பந்திக்காமலேயே
அனிச்சயாய் நடந்து விடுகிறது
ஒவ்வொரு திரு விழாக்காலத்திலும் 
உன் நினைப்பு.

பலா மரத்தடி மூலையின்
பின்பக்க சுவற்றில்
புதிதாய் அடித்த
சுண்ணாம்பு வண்ணத்துள்
புதைந்து கிடக்கிறது
யாருக்கும் தெரியாமல் 
நாம் கிறுக்கிய
நம் பெயர்களின் முதல்
எழுத்துக்கள்.

தயவு செய்து அந்த பலா மரத்தடி
சுவற்றுப்பக்கம் போய் விடாதே
நீ அழுது துடைத்துத்தந்த
ஒரு கைக்குட்டை போதும்
உன் ஞாபக பிசு பிசுப்பில்
ஒரு நூற்றாண்டு வாழ.

அத்தனை கூட்ட நெரிசலிலும்
பரிச்சயமான இரண்டு சோடி
கண்கள் காதல் பேச மறந்து
கண்ணீர் பேச படபடக்கும்
தருணங்களில்
ஒரு நடுத்தர வர்க்க அரச ஊழியனின்
சம்பள நாள் அவஸ்தை போல்
மனம் பட்டியல் இடுகிறது 
புன்னகையை செலவு செய்து
கண்ணீரை சேமிக்க சொல்லி.

உன்னிடம் கேடபதற்கு
ஒரேஒரு கேள்வி வைத்துருக்குறேன்
கடைசியாக நீ எப்போது தூங்கினாய்
என்று.
தயவு செய்து திருப்பி என்னிடம் 
கேட்டு விடாதே சொல்வதற்கு என்னிடம் பதில்கள் இல்லை.

காதல் கிறுக்கிய
சித்திரத்தில் நீயும் நானும்
சமாந்தர நேர்கோடுகள்.

உனக்கு தாகம் என்றால்
ஏனடி என் கண்ணில்
கிணறு வெட்டினாய்.

காலப்பயணம்

நகரங்களை பூட்டி
நரகத்தை திறந்து விட்டதொரு
பெரும் தொற்று நாளில்
பொதி சுமந்து 
வயிர் நிறைத்த குடும்பம் ஒன்று.
பசி துரத்த பயணிக்குறது
தன் கூடுதேடி.

அத்தனை வாகன நெரிசலிலும்
பேரூந்தின் யன்னல்  கம்பியின் ஊடே
தெருவோர கடையில் அடுக்கி இருந்த
மிட்டாயில் மொய்த்து திரும்பும் தருணத்தில் தேங்கி கிடக்குறது குழந்தையின்
கண்களில் இனிப்பின் சுவை.

வலி சுமந்த வாழ்வின்
மிச்சங்களை நிரப்ப முடியாத
ஆற்றாமையிலும் பணப்பையில்
எஞ்சி கிடக்குறது 
ஒரு துண்டு நம்பிக்கை.

நெரிசலில் விலகி பிரிந்து
மலை ஏற தொடங்குகிறது
பேரூந்து 
ஒரு கோப்பை தேனீரும்
ஒரு சர்க்கரை துண்டும்
நாளைய  விடியலை 
இனிப்பாக்கும் என்ற 
நம்பிக்கையில்

Wednesday, September 1, 2021

வண்ணத்து பூச்சிகளின் தாய்

நான் கணணிகளோடு நிரல் மொழி
பேசுபவன்
நீ
வார்த்தைகளை மென்று மெளனங்களால் விரல் மொழி
பேசியவள்
இப்போதெல்லாம் நான்
வயலின் கற்றுக்கொண்டு இருக்குன்றேன்
உன்னோடு பேச 

பட்டாம் பூச்சிகளுக்கு
உன்னை அதிகம் பிடிக்குமாமே
உண்மையா
எந்த குழந்தகள்தான்
அம்மாவை பிடிக்காது  என்று சொல்லும்.

ஒரு முறையேனும்
பூக்கடைப்பக்கம் வந்து போ
பறித்து சிறை வைத்த பூக்கள் எல்லாம்
தன் சொந்தங்களை தேடி வாடுகின்றன
ஒருமுறை ஏனும் 
 பூக்களின் புன்னகை பேசு
மீண்டும் மலரட்டும்
பூக்களும் பூக்கடையும்.

நீ  ஒன்றும் ஓவியம் அல்ல
அழகை வரையும்  தூரிகை
மோனாலிசாக்களிள்
தூரிகைத்தாய்.

உலகின் முதல் மொழி
பேசுபவளே
எப்படி முடிகிறது  உன்னால்.
பிரபஞ்ச ஆச்சர்யங்களை
ஒரு புன்னகையில் ஒளித்து வைக்க.

உலக அதிசயங்கள் ஏழு என்று
புத்தகத்தில் படித்து இருக்குறேன்
உன்னை பார்த்த போதுதான்
தெரிந்தது அதிசயங்கள் ஏழு அல்ல
ஒன்றே ஒன்றுதான்.

மழை அழுத நாளில்

 மழைக்கால இரவொண்றின்
நிசப்தம் கலைத்து
அடங்கி போகிறது
ஆட்டிலெறி செல் ஒன்று.

தன் கனவு தேசத்தின்
தொடர்பிளந்து திடுக்கிட்ட
அம்மு குட்டியின் 
மூண்று வயது தேடல்கள்
அம்மா என்று அழைத்து 
தன் போர்வைக்குள்ளால்
அப்பாவை இறுக்கி கொள்கிறது 

அம்முவை போலவே அப்பாவும்
நினைத்துருக்கலாம் 
இதேபோன்றதொரு 
செல் மழை பொழிந்த நாளில்
தான் தொலைத்த
துண்டங்களாய் கிடந்தவர்களில்
மகனாகவோ.மகளாகவோ
யாரோ ஒருவரை.

வடு

பேர் இரைச்சலையும்
கலைத்து விடும் வெறுமையோடு 
வெட்டு இயந்திரத்தை
சுற்றி சுற்றி பறக்கிறது
வயதான ஊர் குருவி
இதற்கு முந்தய பருவத்தில்
இறகு முளைத்து கண் திறக்காத
மூன்று குஞ்சுகளை விட்டுப்பறந்த
ஆற்றாமையோடு 
சக்கரத்தில் எச்சங்களேனும்
கிடைக்காதா என்ற
ஏக்கத்தில்.

ஒரு யுகமாய்
அடுப்பெரிக்க
பதிந்த உழவனின் புதையுண்ட
கால் தடத்தின் மீது அழுத்தும் சில்லில் இருந்து வரும்
சகதி
விஞ்ஞானத்தின் மீது
சேறு அள்ளி உமிழ்ந்து விட்டு போகிறது இழந்த பாரம்பரியத்தின்
எச்சங்களை.

கதிர் பொறுக்கி வாழ்ந்த
வயதான ஏழை விரல்கள்
இப்போது என்ன செய்துகொண்டிருக்கும்..
கைஏந்துவதை தவிர.

Thursday, August 19, 2021

புத்தன் கற்பிழந்த நாள்

தேர்ச்சில்லுக்காய் வண்டி உருட்டி
விளையாடிய
அரை காற்சட்டை வயதில்
கடிக்க வந்த நாயை
தடி எடுத்தும் கல்லெடுத்தும்
எனை மீட்டு 
முத்தம் தந்து  தேற்றிய
அதே  அக்காதான்

துப்பாக்கி கைகள் தூக்கிச்சென்று
கதவடைத்து
நான்கு சப்பாத்து கால்கள்
காவலிருக்க 
ஒன்றன் பின் ஒன்றாய்
புத்தன் கற்பு இழந்த  நாளில்
நினைவு இழந்து மீண்டதில் இருந்து...

தேற்றுதலுக்கான
எந்த மொழிகளும் இன்றி
ஏதோ ஒன்றை மீட்பதற்காய்
கைகளை  ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே
தெருத்தெருவாய் நகர்கிறாள்
பாட்டி வயதாகியும் 
எங்கள் அதே அக்கா.

Sunday, August 15, 2021

வாழ்க்கை

மூச்சு இழுத்து மூச்சடக்கி
உந்தி எறிய 
பரந்து விரிந்து நீரில் அமிழும்
ஒவ்வொரு ஈயத்துண்டின்
அமிழ்தலிலும்

மெல்லிய
சூழ் விளக்கு வெளிச்சத்தின்
ஓரா முள் கிளித்து ஒழுகும்  இரத்தத்திலும்

பறியில் இருந்து தவறிய
மீன் ஒண்றின்
பிரிதலிலும்

ஊறி ஊறி தண்ணீர் திண்ற
நீர் சிரங்கு ரணத்திலும்
குளிர் காய 
இழுத்து விடும் 
வீடி புகையின் வெப்பத்திலும்
உறைந்தே கிடக்கும்
மீனவனின் கரை சேராகனவுகள்.

பனம்பழம்

ஒற்றைப்பனம் பழம்
என்வீட்டு அடுப்புக்கல்லில்,
யாருக்கும் தெரியாமல்
கசியும் அம்மாவின் கண்ணீர் போல் கசிந்து கசிந்து
ஒரு பழஞ்சோற்று
நாழுக்காய் காத்திருந்தது
மிச்ச சோற்றை 
கரைத்து தந்த அம்மா
பிழிந்து எறிந்த 
சூடு கண்ட பனம்கொட்டை  சொல்லும்
எத்தனை பொழுதுகள் 
மூழாது இருந்தது
என் வீட்டு அடுப்பெண்று.

முடிவிலி

எந்த பிரயத்தனங்களும்
இல்லாமல் நினைத்த வாக்கில்
அழுதுவிட முடி கிறது.

ஒரு தொட்டா சுருங்கியை 
தொட்டுப்பார்க்கும்
குழந்தைபோல்

அத்தனை இலகுவில் என்னால்
தவிர்த்து விட முடிவதில்லை
நீ பற்றிய இருப்புகளை

காலத்தின் கைகுட்டையால்
அடைத்து விடுவது ஒன்றும் 
அத்தனை சுலபம் அல்ல
பீறிட்டு பாயும்
உன் ஞாபக ஊற்றுக்கண்களை,

உன் நினைவுகள்
ஒன்றும் ஹனுமனின் வால் அல்ல
தீ வைத்து கொழுத்த
அது துரெளபதையின் சேலை.

Wednesday, August 11, 2021

பொன்னி வண்டு

என்கடைக்குட்டி தங்கை 
எப்போதும் கேட்டு அழும்
பச்சை நிற ராசா பொன்னி வண்டு

இப்போதுதான்
வைக்கோல் போருக்கு
அருகில் இருந்த
வாகை மரத்தில் குஞ்சி வைத்தது

காயப்படுத்த  தெரியாத
குழந்தை பொன் வண்டு குஞ்சிகளை
காயப்பட்டு விட கூடதென்று
வாகை இலை மெத்தை
போட்டு சிரட்டையில்
அடைத்து கொடுத்தேன்

அம்மாவுக்கு தெரியாமல்
அம்மா கைப்பிடி அரிசி
சேர்க்கும் அடுக்குப்பானைக்கு
அருகில் அடைவைத்தாள்

செல் விழுந்த ஊரை பிரிந்து
ஓடிப்போகும் முதல் நாள் வரை
மொத்தம் மூண்று நாள்
பத்திரமாய் வளர்த்திருப்போம்.

இப்போதும்
என் ஞாபக கிளைகளில் மொய்த்துக்கொண்டுதான்
இருக்குறது
நான் விட்டு விட்டு ஓடிவந்த 
பொன்னி வண்டு குஞ்சிகள்.

முத்தம்

வெறும் கை  பொத்தி தூங்கும்
குழந்தைகள்
எதை பொத்தி தூங்கும்
பகல் எல்லாம்
தான் சேமித்த 
சின்ன சின்ன செல்ல முத்தங்களை தவிர.

அழகு

பொம்மைகளை
குளிப்பாட்டும் குழந்தைகள்
ஒரு போதும் அடித்ததே இல்லை
பொம்மைகளை.

மருந்து

தன்
இரவுகள் தொலைத்த தூக்கத்துக்காய்
மருந்து தேடி  போகும்
மகன்களுக்கு
எந்த மருத்துவரும்
மருந்து சீட்டில்
எழுதி கொடுத்ததே இல்லை
முதியோர் இல்ல
அப்பாக்களின்.அம்மாக்களின்
பெயர்களை.

Monday, August 9, 2021

வாழ்க்கை

நாளைய வாழ்தலுக்காய்
அவித்த சோளன் விக்கும்
அத்த வாகரை ஆச்சிக்கு
இண்று உரித்தெறிந்த
சோளன் செட்டைகள் போல்
அத்தனை இலகுவாக
நீக்க முடியவில்லை
எப்போதும் கூடவே 
ஒட்டிக்கொண்ட வறுமையை.

மகனும் நானும்.

குழந்தையோடு பயணிக்க வேண்டும்
இல்லையேல் குழந்தைபோல்
பயணிக்கவேண்டும்
அப்போதுதான்
பிரபஞ்சத்தின்
ஆச்சர்யங்கள்
வழி எல்லாம் கொட்டிக்கிடக்கும்.

ஆள் அரவம்  குறைந்த
காட்டு வளியே
ஒரு விடுமுறை நாளில்
நானும் மகனும் ஒரு உத்துருளி பயணமும்.
அது என்னப்பா?
குளக்கட்டு 
யார்ரப்பா? அது எல்லாருக்கும் சொந்தம்
எனக்கு மா அப்பா?
உனக்கும் தாண்டா குட்டி 
ஏன் அப்பா நிறைய மரம்?
இது காடு செல்லம்
காடு யாருடப்பா? எல்லாருக்கும் தான் 
டைசோஐ் இருக்குமா அப்பா?
இருக்காது குட்டி
ஏன் அப்பா?
செத்துட்டு குட்டி
பாவம் எனப்பா?
ம்
அப்பா... தண்ணி வேனும்
பருக்கி விட்டேன்
இந்த மரம் எல்லாம்
எப்படிப்பா தண்ணி குடிக்கும்?
அதுக்கு வேர் இருக்கு வேர்களால் குடிக்கும் அம்மு.

இப்படித்தான்
மரங்களின் கீழே  முளைத்த  மரக்கன்றுகள்
அம்மா  மரங்களை பார்த்து
கேட்டுருக்குமே என்னமோ
குளமும் காடும் யாருக்கு சொந்தம்
என்றோ
வேர் இல்லா மனிதர்கள்
எப்படி நீர் அருத்துவார்கள் என்றோ.

குப்பை

வண்ணத்துப்பூச்சி பறக்கும்
மெல்லிய மழை மாதம்
திருவிழா முடிந்து
மனிதர்கள் விட்டுப்போன
நினைவுகளாலும் மிச்சங்களாலும்
நிறைந்து வழிந்தது கோவில் தெரு

உடையாத வளையல்கள்
உடைந்த வளையல்கள்

யாரோ கசக்கிக்போட்ட
முதல் எழுத்து பெயர் பதித்த கைக்குட்டை
 
பிச்சைக்காரர்  தொலைத்த கசங்கிய பத்து ரூபாய்
குழத்தையின் கையில் இருந்து 
தவறு விழுந்த 
முயல் பொம்மை.

பிஞ்சி உதட்டை பிரிந்து
அழும் இரப்பர் சூப்பி

அப்பாக்களின் மூச்சு காற்றை தொலைத்த குழந்தைகளின் பலூன் துண்டுகள்

நாளைய பொழுதுக்கு விருந்தாகும்
தன் கடைசி வாழ்நாளை
ஏலத்தில் வாங்கிய 
பாணிச்சாவலின்
படபடத்துப்பிரிந்த இறகொன்று

நிராகரித்த காதலாய்
தூக்கி எறிந்த வாடிப்போன
ஒற்றை ரோசாப்பூ


இவற்றைத்தானே இத்தனை
காலமும்
குப்பை என்று நினைத்துக்கொண்டு
இருக்குறோம்.

ஐயா குப்பைகாரரே
மன்னிக்கவும் சுத்தக்காரரே
இனியாவது
குப்பைகளை பைகளில்
திணிக்கும் போது
அழுத்தம் கொடுத்து திணிக்காதீர்.

அதற்குள்ளும் இருக்ககூடும்
உடைந்து நொறுங்கிப்போன அத்தனை மனசின்
துண்டுகளும்.

Saturday, August 7, 2021

அழுக்கு

முப்பது ஆண்டுகளுக்கு 
முந்தியதொரு
பள்ளி்க்கூட புகைப்படத்தை பார்த்தேன்.
மடிப்பு விலகாத கஞ்சி போட்டு மினுக்கிய வெள்ளைச்சட்டையில் 
மிடுக்காய் இருந்தோம் நாம் எல்லோரும்.

ஊருக்கே வெள்ளாவி வைத்து
வெளுத்து தருபவர்தான் 
வன்னியக்கண்டு ஐயா
கடைசிவரை நான்
பார்த்ததே இல்லை
அவர் சட்டை போட்டு

தன் தோள்
மூட்டையில் அழுக்குத்துணி
திணித்து திணித்தே
வாழ்வை திரப்பியவர்

எல்லா பண்டிகை நாட்களிலும்
வீட்டுக்கு வெளியே தள்ளியே வைத்து
மிஞ்சிய பலகாரம் குடுக்கும்
வெள்ளைவேட்டி மனிதர்களின்
மனங்களை
கடைசிவரைக்கும் அவரால் 
வெளுக்க முடியாமலே போனது.

சாயல்

பயண மணி அடித்தபோதும்
மூண்றாம் வகுப்பு இருக்கையில்
இருந்த அம்மாக்கள் எதைத்தான்
அவனிடத்தில்
இத்தனை வாஞ்சையோடு பார்த்தார்களோ?

பனிக்கால இரவின்
மெல்லிய வெளிச்சத்தில்
புகைரத நிலைய
தெருவோரக்கடையில்
தெம்பிலி வெட்டும் இளைஞனிடம்
அப்படி என்னதான் இருந்துருக்கும்?

கொக்கட்டி சோலையில்
காணாமல் போன மகனின்
சாயலாகவோ
ஜெயசுக்குறு சண்டையில்
செத்துப்போன
புத்தாவின் சாயலாகவோ
இருப்பதை தவிர.
வேறென்ன இருந்துருக்கும்.

அட்சயபாத்திரம்.

அம்மா
கிடுகு இழைத்த
ஒற்றை பத்து ரூபாய்
சேனையூர் ஆற்று
மணலை மீனுக்கு
சரியாய் போனது.
மணக்க மணக்க ஆணம் வைத்து
மனசு நிறய அள்ளி வைப்பாள்.

குட்டி தங்கைக்கு சினைத்துண்டு
தம்பிக்கு பிடிச்ச பொக்கணி
அக்காவின் தலைப்பங்கு
நடு தங்கைக்கு நடுத்துண்டு
வயிறும் வால்துண்டும் எனக்கு.

எங்கள் தட்டை தன் பட்டினி கொண்டு
நிரப்புவாள் அம்மா.
எப்போதும் தனக்கென்று
வைத்துருப்பாள்
பசி  இல்லா ஓர்
அட்சய பாத்திரம்.

எதை சொல்வாய்

நீண்ட நாட்களின் பின்
தற்செயலாகத்தான் 
சந்தித்து கொள்கிறோம்
காரணம் ஏதுமின்றி பிரிந்தது போலவே

முன்பு போல்
மெளன முடிச்சை முதலில்
யார் அவிழ்ப்பது 
என்ற நிர்ப்பந்தம்
நமகுகிடையில் இப்போதுஇல்லை.
யார் வேண்டுமானாலும் அவிழ்த்துவிடலாம்
இனி பேச எதுகும் இல்லையென்றானபோது
யார் அவிழ்த்தால் என்ன?

மிஞ்சி மிஞ்சிப்போனால்
நீ எதைச்சொல்வாய்
என்னை
மன்னித்து விடுங்களையா
அடைத்து வைத்திருக்கும்
கண்ணீர் மொழிகளையா
இல்லை
என் கனவு குடிசைக்குள் 
உன்னால் நுழைய முடியாதென்று
உதறி விட்டுப்போனதையா.
இனி
எதைச்சொன்னால் என்ன
எதுகும் இல்லை என்றானபோது.                 

பயம்

மழை வேண்டி
கொடும்பாவி இழுத்தவருக்கு
டா டா காட்டி
கை அசைக்கும்
குழந்தைக்கு தெரியவா போகிறது
ஒழுக்கு வீட்டு அம்மாக்களின்
மழை வந்து விடுமோ எண்ற பயம்.

Thursday, July 29, 2021

சோற்றில் நட்ட அறுகம்புல்.

கடலுக்கு அருகே சூரியன்
ஒரு கைப்பிடி அளவுதான்
வெளிச்சம் மிச்சம் உள்ளது
அதற்குள்ளாக அவர்கள்
கூட்டிப்போன
அப்பாவும் மகனும்
வந்துவிட வேண்டும்.

சப்பாத்துச் சத்தங்கள் ஓய்ந்து
இன்றோடு
ஆறு நாட்களாகியும்
அவர்கள் வரவே இல்லை

அரைகுறை எரிந்து
அழுகிகிடந்தவற்றை எல்லாம்
புதைத்து விட்டு வந்தவர்கள்
எழுபத்தி இரண்டு பேரின்
விபரம் சொல்ல
ஊரே ஒப்பாரி வைத்து அழுதது.

எல்லோரும் கனத்துக்கிடக்க
அவன் அம்மா மட்டும்  
நான்கு திசையிலும் 
தன் புலன்களை திறத்து
மெளனித்து கிடக்குறாள்
எந்த திசையிலிருந்தும்
பிணவாடையோ. புகை மூட்டமோ 
வந்துவிடக்கூடாது  என்ற தவிப்பில்.

எப்படித்தான் முடிகிறதோ அவரால்
ஒரு கைப்பிடி அளவு நம்பிக்கையோடு
ஏதோ ஒரு பதிலுக்காய்
முப்பத்தி இரண்னு ஆண்டுகள் காத்துருக்க.

என்றாவது ஒரு நாள்
யாராவது வந்து 
சொல்லாமலா போவார்கள்?
எங்கோ ஒரு சிறைக்கம்பியின் ஊடோ
இல்லை ஒரு வயல்காட்டின் ஓரத்தில்
எலும்புக்கூடாகவேனும் பார்த்ததாக.

Monday, July 26, 2021

மறந்துபோன கதை

இப்போது இருந்துருந்தால்
தவராசன் அண்ணாவுக்கு ஐம்பத்து நான்கு வயது முடிந்துருக்கும்.
அடிக்கடி அம்மா  சொல்லும் போதெல்லாம் கேட்டுருக்கின்றேன்
பக்கத்து வீட்டு மாலா அக்காவுக்குத்தான்
அவரை பேசி வைத்துருந்தார்களாம் 

மாலா அக்காவுக்கு ஒரு குறையுமில்லை
ஒற்றையாக கோருத்த 
கனகாம்பர மாலையில் 
எப்போதும் கலகலப்பாகவே இருப்பார்
எங்கள் சின்ன அக்கா மாதிரியே
கல்யாணத்துக்கு நான்கு நாட்கள்தான்
இருந்ததாம்

கங்கு வேலிக்கு வைக்கோல் 
ஏற்றப்போனவர்
பெருவெளியில்  சுடப்படு 
பிணமாக கிடந்தாரம் .
இன்றைக்கும் கனகம்மா ஆத்த
நெஞ்சிலடிச்சி கத்துவா.

கொஞ்சம் கொஞ்சமாக
தவராசா அண்ணாவைப்போலவே 
மறந்தே போனோம்
ஆனையிறகுச் சண்டையில்
செத்துப்போன மாலா அக்காவையும்.

Friday, July 23, 2021

"இஷாலினி"


மலை முகட்டின் இடுக்கில் இருந்து வரும் கொழுந்து கருகும் வாடைக்காற்று 
இரண்டு நூற்றாண்டு லயத்தின்
வலி சுமந்து போகும்.

தீயில் கருகுமுன் ஒவ்வொரு நொடிகளும் உன் ஆன்மா
கடைசியாக முனங்கிய
ரணங்களை விடவா? இனி
நடுங்கும் குளிரின் அட்டைக்கடியும்
விரலிடுக்கில் வெடித்து வழியும்
ரத்தக்கசிவும்  ஆற்றாத ரணங்களாக இருந்துவிடப்போகின்றது உன் அம்மாவுக்கு.

இத்தனை காலமும் 
எரிந்து எரிந்து எம்மை ராமனாக்கியது
போதும் தாயே.
நவீன ராமர்கள் 
அம்பையும் வில்லையும் போல்
கற்பையும் தொலைத்தவர்கள் தான்.

உன்மீது யாரும்
தவறு இழைக்கவில்லை
என்பதற்கான  நியாயங்களை
அளவுக்கு அதிகமாகவே அவர்கள்
சேர்த்துருப்பார்கள் அவர்கள் செல்வம் போலவே.

கனவான்களே
ஒரு முறையேனும்
உங்கள் மனங்களை தடவிக்கொடுங்கள்
உள்ளிருக்கும் ஓராயிரம்
அகலிகைகளில் ஒரு சிலவேனும் உயிர் பெறட்டும்.

Monday, July 12, 2021

சிதிலம்

என் வீட்டில் இருந்து
இரண்டு வீடுகள்
தள்ளித்தான் இருந்தது
முல்லைத்தீவு கடற்சமரில் 
மரணித்துப்போன 
என் பள்ளித்தோழனின் வீடு.
எனக்கும் அவனுக்குமான 
நட்பு. அவன் வீட்டு  
வேலி ஓரத்து  அன்னமுனா பூக்கள்
பறித்துண்ட  பொழுதுகளில்  தொடங்கியது.
சாணி போட்டு மெழுகிய
அவன் வீட்டு தாழ்வாரத்தில் 
ஊர்ந்து திரியும்
பிள்ளை பூச்சி  பிடித்து விளையாடி
அவன் அப்பாவிடம் 
வாங்கிய அடிக ளோடு 
மறந்தே போனது  பூச்சி பிடிக்கும் 
ஆசையும்  அவன் அப்பா பற்றிய 
நினைவுகளும்.
எண்பத்தி ஐந்துகளின்
ஏதோவொரு
சுற்றி வளைப்பு
நடந்ததொரு நாளில்
நையந்தை குளக்கட்டடியில்
கடசியாக யாரோ கண்டார்களாம். 
இப்படி காணாமல் போன
பல நூறு அப்பாக்களைப்போலவே
இன்றுவரை வீடு திரும்பவே இல்லை
அவரும்.
அவன் வீடு இருந்த இடத்தில்
முளைத்திருக்கும்
எருக்கலம்
செடிகளைப்போலவே
செல் விழுந்து செத்துப்போன
அவன் அம்மா வை புதைத்த 
வம்மி வட்டவான் 
கடற்கரையிலும் முளைத்துருக்கலாம் 
எருக்கலம் செடிகள்.



Sunday, June 20, 2021

தந்தையர் தினவாழ்த்துக்கள்.

அப்பாக்கள் பற்றிய 
எதையுமே அறியாத...
அம்மாக்களாலும்
பாட்டிகளாலும்
இல்லங்களாலும்
வளர்க்கப்படும்
யுத்தங்கள் கொன்றழித்த 
அப்பாக்களின் குழந்தைகள்
யாருக்கு சொல்லும் 
அப்பாக்கள் தின வாழ்த்துக்களை?


Monday, June 7, 2021

ஐயா


எல்லாவற்றிலும் இருந்து
விலகியே இருக்கிறது
எனக்கான இன்றய நாள்.
ஏதோ இழக்கக்கூடாத.
ஒன்றின் இழப்பை
வரட்சியோடு இணைய வெளி
சுவாசித்துக்கொன்டிருக்குறது..
என் அரிவரி வகுப்பு
தமிழாசிரியரின்
இறப்புச்செய்தியை
தற்செயலாக
இணையத்தில் படித்தேன்.
வெள்ளைத்தாளாய்
வீசிவிட்டுப்போன மிச்சங்களை
எதைக்கொன்டு நிரப்புவது?
இத்தனை இலகுவாக 
உங்களால் எப்படி முடிந்தது
காலக்கிடங்கில் தனித்து இறங்க.
உங்கள் 
வெற்றிடத்துக்கான
நிரப்புதல்கள்
எங்களிடம் எப்போதைக்கும்
இல்லாமல் போகலாம்.
நீங்கள் பற்றிய எதயும்
நாங்கள மறந்திருக்க மாட்டோம்
அதற்கான வாய்ப்புகளை
மிக அரிதாகவே தந்துள்ளீர்கள் எமக்கு.
யார் கண்டது!.
கடதாசி துண்டுகள் இல்லா முற்றம்
நடுவில் ஒரு ஆலமரம்  
அதனடியில் சின்னதாக பிள்ளையார் கோவில் 
வாசலில் ஒரு விலாட் மாமரம் 
சுற்றிலும் நேர்தி செய்த குறவட்டன் செடிகள்.
அடுக்குமாடி அசோக் மரங்கள்
அடைகாக்கும் புறாக்கூட்டம்
நீண்ட நெடிய நற்சிந்தனை
சின்னதான கண்டிப்பு
இவற்றை எல்லாம்  மீன்டும் ஒருமுறை
எமக்காக  புதுப்பிக்கத்தான்
போநீர்களோ என்னவோ?
என்ன செய்ய ஆற்றாத வலிகளை 
இப்படித்தானே
ஞாபகங்களைக்கொன்டு
நிரப்ப முடிகிறது
.
(சத்தியபிரபாகர் 1ம் வகுப்பு மாணவன்)