Monday, September 6, 2021

வீரமுனை 1990

வசந்த கால  பனி போர்த்த
மெல்லிய  பின்னிரவொன்றின்
தூக்கம் கலைத்து 
அடங்கிப்போகிறது ஆட்காட்டியின் குரல்

சாளர இடுக்கின் வழியே
துப்பாக்கி கைகள் முகத்தில்
அடித்த மின் சூழின் 
துயர வெளிச்சத்தில்
எஞ்சிய இரவு
ஒளிந்து கொள்கிறது.

நிலை அதிரத் தட்டும் சீருடை
கதவின் பின்னால் இரவை பற்றவைக்க சொல்லும் தருணத்தில்
உரசிய தீக்குச்சொன்று
குப்பி விளக்கை உயிர்ப்பிக்க
பயங்கள் மட்டுமே துணை இருக்க
கத்தியும் ஆண்மையும்
தங்களை கூர் பார்து நிமிர்த போது
இரத்த  வேள்வியில்
உருக்குலைந்து கிடந்தது 
தளிர் விட்ட
தலைமுறை ஒன்று.

வேள்வி முடிந்து 
வீட்டுக்கு  வைத்த தீ
தோற்றுப்போன விடியலுக்குள்
எரிந்து கொண்டிருந்தது
சாட்சிக்கு நின்ற இரவையும்  சேர்த்து

பிணம் தின்ற கழுகும்
பாலூட்டிகளை
வேட்டையாடும் ஆந்தையும்
கூடு வைத்திருக்கும்
போதிமர கிளையின் கீழே
புத்தர் தியானித்துருப்பார்
ஞானத்தின் எச்சம்  வேண்டி

கிழித்தெறிந்த பிள்ளையின்
இடுப்பில் இருந்த  லாட 
துண்டொன்று
கிணற்றில் ஆழ்ந்து கிடக்குறது
விடுதலை கனவோடு.

இரு சமாந்தர நேர்கோடுகள்.

குடை தைப்பவரின் கோடைக்கால
பசி போல்
நிர்பந்திக்காமலேயே
அனிச்சயாய் நடந்து விடுகிறது
ஒவ்வொரு திரு விழாக்காலத்திலும் 
உன் நினைப்பு.

பலா மரத்தடி மூலையின்
பின்பக்க சுவற்றில்
புதிதாய் அடித்த
சுண்ணாம்பு வண்ணத்துள்
புதைந்து கிடக்கிறது
யாருக்கும் தெரியாமல் 
நாம் கிறுக்கிய
நம் பெயர்களின் முதல்
எழுத்துக்கள்.

தயவு செய்து அந்த பலா மரத்தடி
சுவற்றுப்பக்கம் போய் விடாதே
நீ அழுது துடைத்துத்தந்த
ஒரு கைக்குட்டை போதும்
உன் ஞாபக பிசு பிசுப்பில்
ஒரு நூற்றாண்டு வாழ.

அத்தனை கூட்ட நெரிசலிலும்
பரிச்சயமான இரண்டு சோடி
கண்கள் காதல் பேச மறந்து
கண்ணீர் பேச படபடக்கும்
தருணங்களில்
ஒரு நடுத்தர வர்க்க அரச ஊழியனின்
சம்பள நாள் அவஸ்தை போல்
மனம் பட்டியல் இடுகிறது 
புன்னகையை செலவு செய்து
கண்ணீரை சேமிக்க சொல்லி.

உன்னிடம் கேடபதற்கு
ஒரேஒரு கேள்வி வைத்துருக்குறேன்
கடைசியாக நீ எப்போது தூங்கினாய்
என்று.
தயவு செய்து திருப்பி என்னிடம் 
கேட்டு விடாதே சொல்வதற்கு என்னிடம் பதில்கள் இல்லை.

காதல் கிறுக்கிய
சித்திரத்தில் நீயும் நானும்
சமாந்தர நேர்கோடுகள்.

உனக்கு தாகம் என்றால்
ஏனடி என் கண்ணில்
கிணறு வெட்டினாய்.

காலப்பயணம்

நகரங்களை பூட்டி
நரகத்தை திறந்து விட்டதொரு
பெரும் தொற்று நாளில்
பொதி சுமந்து 
வயிர் நிறைத்த குடும்பம் ஒன்று.
பசி துரத்த பயணிக்குறது
தன் கூடுதேடி.

அத்தனை வாகன நெரிசலிலும்
பேரூந்தின் யன்னல்  கம்பியின் ஊடே
தெருவோர கடையில் அடுக்கி இருந்த
மிட்டாயில் மொய்த்து திரும்பும் தருணத்தில் தேங்கி கிடக்குறது குழந்தையின்
கண்களில் இனிப்பின் சுவை.

வலி சுமந்த வாழ்வின்
மிச்சங்களை நிரப்ப முடியாத
ஆற்றாமையிலும் பணப்பையில்
எஞ்சி கிடக்குறது 
ஒரு துண்டு நம்பிக்கை.

நெரிசலில் விலகி பிரிந்து
மலை ஏற தொடங்குகிறது
பேரூந்து 
ஒரு கோப்பை தேனீரும்
ஒரு சர்க்கரை துண்டும்
நாளைய  விடியலை 
இனிப்பாக்கும் என்ற 
நம்பிக்கையில்

Wednesday, September 1, 2021

வண்ணத்து பூச்சிகளின் தாய்

நான் கணணிகளோடு நிரல் மொழி
பேசுபவன்
நீ
வார்த்தைகளை மென்று மெளனங்களால் விரல் மொழி
பேசியவள்
இப்போதெல்லாம் நான்
வயலின் கற்றுக்கொண்டு இருக்குன்றேன்
உன்னோடு பேச 

பட்டாம் பூச்சிகளுக்கு
உன்னை அதிகம் பிடிக்குமாமே
உண்மையா
எந்த குழந்தகள்தான்
அம்மாவை பிடிக்காது  என்று சொல்லும்.

ஒரு முறையேனும்
பூக்கடைப்பக்கம் வந்து போ
பறித்து சிறை வைத்த பூக்கள் எல்லாம்
தன் சொந்தங்களை தேடி வாடுகின்றன
ஒருமுறை ஏனும் 
 பூக்களின் புன்னகை பேசு
மீண்டும் மலரட்டும்
பூக்களும் பூக்கடையும்.

நீ  ஒன்றும் ஓவியம் அல்ல
அழகை வரையும்  தூரிகை
மோனாலிசாக்களிள்
தூரிகைத்தாய்.

உலகின் முதல் மொழி
பேசுபவளே
எப்படி முடிகிறது  உன்னால்.
பிரபஞ்ச ஆச்சர்யங்களை
ஒரு புன்னகையில் ஒளித்து வைக்க.

உலக அதிசயங்கள் ஏழு என்று
புத்தகத்தில் படித்து இருக்குறேன்
உன்னை பார்த்த போதுதான்
தெரிந்தது அதிசயங்கள் ஏழு அல்ல
ஒன்றே ஒன்றுதான்.

மழை அழுத நாளில்

 மழைக்கால இரவொண்றின்
நிசப்தம் கலைத்து
அடங்கி போகிறது
ஆட்டிலெறி செல் ஒன்று.

தன் கனவு தேசத்தின்
தொடர்பிளந்து திடுக்கிட்ட
அம்மு குட்டியின் 
மூண்று வயது தேடல்கள்
அம்மா என்று அழைத்து 
தன் போர்வைக்குள்ளால்
அப்பாவை இறுக்கி கொள்கிறது 

அம்முவை போலவே அப்பாவும்
நினைத்துருக்கலாம் 
இதேபோன்றதொரு 
செல் மழை பொழிந்த நாளில்
தான் தொலைத்த
துண்டங்களாய் கிடந்தவர்களில்
மகனாகவோ.மகளாகவோ
யாரோ ஒருவரை.

வடு

பேர் இரைச்சலையும்
கலைத்து விடும் வெறுமையோடு 
வெட்டு இயந்திரத்தை
சுற்றி சுற்றி பறக்கிறது
வயதான ஊர் குருவி
இதற்கு முந்தய பருவத்தில்
இறகு முளைத்து கண் திறக்காத
மூன்று குஞ்சுகளை விட்டுப்பறந்த
ஆற்றாமையோடு 
சக்கரத்தில் எச்சங்களேனும்
கிடைக்காதா என்ற
ஏக்கத்தில்.

ஒரு யுகமாய்
அடுப்பெரிக்க
பதிந்த உழவனின் புதையுண்ட
கால் தடத்தின் மீது அழுத்தும் சில்லில் இருந்து வரும்
சகதி
விஞ்ஞானத்தின் மீது
சேறு அள்ளி உமிழ்ந்து விட்டு போகிறது இழந்த பாரம்பரியத்தின்
எச்சங்களை.

கதிர் பொறுக்கி வாழ்ந்த
வயதான ஏழை விரல்கள்
இப்போது என்ன செய்துகொண்டிருக்கும்..
கைஏந்துவதை தவிர.

Thursday, August 19, 2021

புத்தன் கற்பிழந்த நாள்

தேர்ச்சில்லுக்காய் வண்டி உருட்டி
விளையாடிய
அரை காற்சட்டை வயதில்
கடிக்க வந்த நாயை
தடி எடுத்தும் கல்லெடுத்தும்
எனை மீட்டு 
முத்தம் தந்து  தேற்றிய
அதே  அக்காதான்

துப்பாக்கி கைகள் தூக்கிச்சென்று
கதவடைத்து
நான்கு சப்பாத்து கால்கள்
காவலிருக்க 
ஒன்றன் பின் ஒன்றாய்
புத்தன் கற்பு இழந்த  நாளில்
நினைவு இழந்து மீண்டதில் இருந்து...

தேற்றுதலுக்கான
எந்த மொழிகளும் இன்றி
ஏதோ ஒன்றை மீட்பதற்காய்
கைகளை  ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே
தெருத்தெருவாய் நகர்கிறாள்
பாட்டி வயதாகியும் 
எங்கள் அதே அக்கா.