தேர்ச்சில்லுக்காய் வண்டி உருட்டி
விளையாடிய
அரை காற்சட்டை வயதில்
கடிக்க வந்த நாயை
தடி எடுத்தும் கல்லெடுத்தும்
எனை மீட்டு
முத்தம் தந்து தேற்றிய
அதே அக்காதான்
துப்பாக்கி கைகள் தூக்கிச்சென்று
கதவடைத்து
நான்கு சப்பாத்து கால்கள்
காவலிருக்க
ஒன்றன் பின் ஒன்றாய்
புத்தன் கற்பு இழந்த நாளில்
நினைவு இழந்து மீண்டதில் இருந்து...
தேற்றுதலுக்கான
எந்த மொழிகளும் இன்றி
ஏதோ ஒன்றை மீட்பதற்காய்
கைகளை ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே
தெருத்தெருவாய் நகர்கிறாள்
பாட்டி வயதாகியும்