Friday, July 23, 2021

"இஷாலினி"


மலை முகட்டின் இடுக்கில் இருந்து வரும் கொழுந்து கருகும் வாடைக்காற்று 
இரண்டு நூற்றாண்டு லயத்தின்
வலி சுமந்து போகும்.

தீயில் கருகுமுன் ஒவ்வொரு நொடிகளும் உன் ஆன்மா
கடைசியாக முனங்கிய
ரணங்களை விடவா? இனி
நடுங்கும் குளிரின் அட்டைக்கடியும்
விரலிடுக்கில் வெடித்து வழியும்
ரத்தக்கசிவும்  ஆற்றாத ரணங்களாக இருந்துவிடப்போகின்றது உன் அம்மாவுக்கு.

இத்தனை காலமும் 
எரிந்து எரிந்து எம்மை ராமனாக்கியது
போதும் தாயே.
நவீன ராமர்கள் 
அம்பையும் வில்லையும் போல்
கற்பையும் தொலைத்தவர்கள் தான்.

உன்மீது யாரும்
தவறு இழைக்கவில்லை
என்பதற்கான  நியாயங்களை
அளவுக்கு அதிகமாகவே அவர்கள்
சேர்த்துருப்பார்கள் அவர்கள் செல்வம் போலவே.

கனவான்களே
ஒரு முறையேனும்
உங்கள் மனங்களை தடவிக்கொடுங்கள்
உள்ளிருக்கும் ஓராயிரம்
அகலிகைகளில் ஒரு சிலவேனும் உயிர் பெறட்டும்.

1 comment:

  1. இங்கு கனவான்களென்று

    யாருமில்லை

    இராமர்கள் கூட

    சீதையை எாித்தும்

    அகலியையை உதைத்தும்தான்

    இராமா்களானார்கள்.

    யாரும் இங்கு சுத்தமில்லை

    குற்றம் செய்வோரும் இவர்களே

    நீதிகேட்போரும் இவர்களே

    என்ன, காட்சிகளும் பாத்திரங்களும்

    அவ்வப்போது மாறும்

    ஆனால், கதை யொன்றுதான்.

    இதுவும்

    ஆகக்கூட

    ஒரு நூறுநாள் ஓடும்

    அதற்குள்

    மற்றப்படம் , ஒரு புதியபடம்

    அதே கதை வேறு பாத்திரங்களுடன்

    திரையேறும்.

    அன்புடன்,
    கரக்கடப்பொடியன்.

    ReplyDelete