இரண்டு வீடுகள்
தள்ளித்தான் இருந்தது
முல்லைத்தீவு கடற்சமரில்
மரணித்துப்போன
என் பள்ளித்தோழனின் வீடு.
எனக்கும் அவனுக்குமான
நட்பு. அவன் வீட்டு
வேலி ஓரத்து அன்னமுனா பூக்கள்
பறித்துண்ட பொழுதுகளில் தொடங்கியது.
சாணி போட்டு மெழுகிய
அவன் வீட்டு தாழ்வாரத்தில்
ஊர்ந்து திரியும்
பிள்ளை பூச்சி பிடித்து விளையாடி
அவன் அப்பாவிடம்
வாங்கிய அடிக ளோடு
மறந்தே போனது பூச்சி பிடிக்கும்
ஆசையும் அவன் அப்பா பற்றிய
நினைவுகளும்.
எண்பத்தி ஐந்துகளின்
ஏதோவொரு
சுற்றி வளைப்பு
நடந்ததொரு நாளில்
நையந்தை குளக்கட்டடியில்
கடசியாக யாரோ கண்டார்களாம்.
இப்படி காணாமல் போன
பல நூறு அப்பாக்களைப்போலவே
இன்றுவரை வீடு திரும்பவே இல்லை
அவரும்.
அவன் வீடு இருந்த இடத்தில்
முளைத்திருக்கும்
எருக்கலம்
செடிகளைப்போலவே
செல் விழுந்து செத்துப்போன
அவன் அம்மா வை புதைத்த
வம்மி வட்டவான்
கடற்கரையிலும் முளைத்துருக்கலாம்
எருக்கலம் செடிகள்.
“Fill your paper with the breathings of your heart.”
ReplyDelete― William Wordsworth
மேலே வில்லியம் வேட்ஸ்வேர்த் சொன்னதுபோல "உங்களின் கடதாசிகளை உங்கள் இதயத்தின் சுவாசத்தினால் நிரப்புங்கள்" என்பதுபோல நமது வாழ்வின் கணங்களை சற்று அழகிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து முறையாய்க் கோருத்து கூறும்போதுதான் காலம்கடந்தும் உயிர்ப்பாய் வாழும் கவிதைகள் உருப்பெறுகிறது என்பது எனது எண்ணம். அதில் ஒரு தவிர்க்க முடியாத உருப்படியாய் நான் இக்கவிதையைப் பார்க்கின்றேன். சிறப்பு.